

புதுடெல்லி,
கியாஸ் சிலிண்டர் பெற வாடிக்கையாளர் விவரங்களை மின்னணு முறையில் இணைக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மின்னணு முறையில் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இறந்தவர்களின் பெயரில் உள்ள கியாஸ் இணைப்புகள், ஒரே முகவரியில் இருக்கும் போலி மற்றும் கூடுதல் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை நீக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
மேலும் மானிய விலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களை, உணவகங்கள், ஓட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார் அடிப்படையிலான மின்னணு கே.ஒய்.சி. சரிபார்ப்பை முடிப்பதற்கான இறுதிகெடுவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதன்படி, வரும் 15-ந்தேதிக்குள் சரிபார்ப்பை நிறைவு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயுக்கான அரசு மானியம் நிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இது குறித்த குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றன.
கே.ஒய்.சி. இணைக்கப்படாத பட்சத்தில் மானிய விலையில் சிலிண்டர் வாங்கும் தகுதியை இழக்க நேரிடும். இதனால் வணிக ரீதியிலான கூடுதல் கட்ட ணம் செலுத்தி சிலிண்டர் வாங்க வேண்டியிருக்கும்.
சில மாநிலங்களில், சரிபார்ப்பு இல்லாத வாடிக்கையாளர்களின் புதிய சிலிண்டர் புக்கிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் என வினியோகஸ்தர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே மின்னணு கே.ஒய்.சி. முடித்திருந்தால், மீண்டும் செய்யத் தேவையில்லை. இதுவரை சரிபார்ப்பு செய்யாத பொதுவான நுகர்வோருக்கும், பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா திட்டப் பயனாளிகளுக்கும் இந்த நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எரிவாயு நிறுவனத்தின் மொபைல் செயலி மூலமாகவே இதை எளிதாக முடிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.