ஜதராபாத் விநாயகர் சதுர்த்தி பூஜையில் லட்டு ரூ.1 கோடியே 1 லட்சத்திற்கு ஏலம்

கடந்த ஆண்டு படைக்கப்பட்ட 10 கிலோ எடை கொண்ட லட்டு, இன்னும் ஒரு படி மேலே போய் ரூ.2.32 கோடிக்கு ஏலம் போய் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
ஜதராபாத் விநாயகர் சதுர்த்தி பூஜையில் லட்டு ரூ.1 கோடியே 1 லட்சத்திற்கு ஏலம்
லட்டு
Published on: 

ஜதராபாத்,

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஜதராபாத்தில் விநாயகர் பூஜைக்கு படைக்கப்பட்ட லட்டு ஒன்று, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்திற்கு ஏலம் போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.1 கோடிக்கு ஏலம்

தெலுங்கானா மாநிலம் ஜதராபாத் பந்தலகுடா ஜாகீர் பகுதியில் உள்ள கீர்த்தி ரிச்மண்ட் வில்லாஸ் குடியிருப்பு வளாகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. அங்கு சாமிக்கு நைவேத்தியமாக 5 கிலோ எடையுள்ள லட்டு படைக்கப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வாக இந்த லட்டு ஏலம் விடப்பட்டது. இதில் அங்குள்ள குடியிருப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு தொகையை உயர்த்தினர். இறுதியாக, அந்த வளாகத்தை சேர்ந்த ‘சக்திமான் குழு’ என்ற குடியிருப்பாளர்கள் குழு, இந்த லட்டை ரூ.1.01 கோடி என்ற தொகைக்கு ஏலம் எடுத்து அசத்தியது.

கடந்த ஆண்டு ரூ.2.32 கோடி

இதே குடியிருப்பு வளாகத்தில் கடந்த ஆண்டு படைக்கப்பட்ட 10 கிலோ எடை கொண்ட லட்டு, இன்னும் ஒரு படி மேலே போய் ரூ.2.32 கோடிக்கு ஏலம் போய் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் கோடி கணக்கில் லட்டு ஏலம் போன செய்தி நாடு முழுவதும் பெரும் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற ஊர்களில்

இதேபோல், மற்ற பகுதிகளிலும் விநாயகர் லட்டுகள் லட்சக்கணக்கில் ஏலம் போயின. சங்காரெட்டி பகுதியில் நடந்த ஏலத்தில் ஒரு லட்டு ரூ.36 லட்சத்துக்கு ஏலம் போனது. ஆந்திர மாநிலத்திலும் 630 கிலோ எடை கொண்ட லட்டு ஒன்று ரூ.25 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த போட்டி?

விநாயகருக்கு படைக்கப்படும் இந்த லட்டு பிரசாதத்தை ஏலம் எடுத்து வீட்டில் வைத்தால் செல்வ வளம் பெருகும், தொழில் பெருகும் என்பது பக்தர்களின் பலத்த நம்பிக்கை ஆகும். மேலும், இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்த தொகையும் ஆர்.வி. தியா அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களின் கல்வி, மருத்துவ உதவி, ஆதரவற்றோர் நலம் மற்றும் விலங்குகள் நலப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com