

கொல்கத்தா,
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு இரு கட்டங்களாக அடுத்த மாதம் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் வடக்கு பர்னாகஸ் மாவட்டம் ஹரோவ் பகுதியில் உள்ள வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, தலைமறைவான வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.