வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: டெல்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

நவம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ள பேரணி மூலம் வாக்காளர் உரிமைகள் மற்றும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான பிரச்சினைகளை முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன
வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: டெல்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு
Published on: 

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ள வாக்கைக் காப்போம்; நாட்டைக் காப்போம் என்ற பிரமாண்ட பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், வணிகர்கள் என ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாக்குகள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளப் பதிவில், “நமது வாக்குகள் திருடப்படுகின்றன. இதை எக்காரணம் கொண்டும் அமைதியாகப் பொறுத்துக்கொள்ள மாட்டோம். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. விதிகளும் சட்டங்களும் மீறப்பட்டுள்ளன. கேள்வி கேட்டவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இப்போது நாடு பதிலளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், நவம்பர் 1-ந்தேதி அனைவரும் டெல்லிக்கு வர வேண்டும் என்றும், வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பா.ஜ.க.வுக்கு ராகுல் காந்தி நன்றி

தனது பதிவில் பா.ஜ.க.வையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் குறிப்பிட்ட ராகுல் காந்தி, பேரணி குறித்த தகவல்களை அதிக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கிண்டலாகக் கூறியுள்ளார்.மேலும், பேரணிக்கு இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில், இதே உற்சாகத்துடன் தொடர்ந்து செயல்படுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக போராட்டம்

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தப் பின்னணியில், நவம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ள பேரணி மூலம் வாக்காளர் உரிமைகள் மற்றும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான பிரச்சினைகளை முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com