

மும்பை,
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ஸ்டாண்ட்-அப் காமெடியன் பிரனீத் மோரே. சமீபத்தில் இவரது நிகழ்ச்சியில் செஜால் பவார் என்ற பெண் டாக்டர் ஒருவர் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செஜால் பவார் மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவர் ஸ்டாண்ட்-அப் காமெடியன் பிரனீத் மோரேவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, “மருத்துவ மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தப்படும் ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்புகளை ஒப்பிட்டு நானும் எனது தோழிகளும் கேலி பேசிக் கொள்வோம்” என்று கூறினார்.
அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், ‘மருத்துவத் துறையில் இருக்கும் ஒருவர் ஆண் சடலம் குறித்து இவ்வாறு உணர்வற்ற முறையில் பேசுவதா?’ என பலர் கேள்வி எழுப்பினர். அதுவும் மருத்துவ மாணவர்கள் கல்வி கற்பதற்காக தாமாக முன்வந்து தங்கள் உடலை தானமாக வழங்கியவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய கீழ்த்தரமான கருத்தை தெரிவித்த பெண் டாக்டரை மருத்துவப் பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு, பலர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் டாக்டர் செஜால் பவார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு தனது பேச்சுக்காக மன்னிப்பு கோரியுள்ளார். அந்த பதிவில், “வைரலாக பரவி வரும் எனது பேச்சு குறித்து மக்கள் ஏன் அதிருப்தி அடைந்தார்கள் என்பதை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் குறித்து எனது கருத்துகள் தவறான முறையில் வெளிப்பட்டுவிட்டன.
யாரையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்றாலும், நோக்கத்தை விட அதன் தாக்கம்தான் முக்கியம் என்பதை நான் உணர்கிறேன். சொன்னதை நியாயப்படுத்தவோ அல்லது அதை விளக்கவோ நான் விரும்பவில்லை. அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
என் வார்த்தைகள் வித்தியாசமாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் என்பதை என்னால் உணர முடிகிறது. இது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. இது நான் உரையாடும் விதத்தைப் பற்றி என்னை சிந்திக்க வைத்துள்ளது.
அந்த வீடியோவால் அதிருப்தி அடைந்த அல்லது காயப்பட்ட அனைவருக்காவும் நான் உண்மையாகவே வருந்துகிறேன். மேலும் இது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் ஒருபோதும் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.