அப்பாவுக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம் - மோடி வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு சிறுமி தனது தந்தைக்கு கடிதம் எழுதுவது போல் வெளியிட்ட வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
அப்பாவுக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம் - மோடி வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவி விடாமல் தடுப்பதற்கு பல்வேறு வழியிலான பிரசாரங்களை மத்திய, மாநில அரசுகள், தொண்டு அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. பிரபலங்களும், தனிநபர்களும் சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சிறுமி, தனது தந்தைக்கு விடுக்கும் செய்தி என்று தலைப்பிட்டு ஒரு வீடியோ காட்சியை நேற்று வெளியிட்டார்.

40 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சி தொகுப்பில், ஒரு சிறுமி மும்பையில் உள்ள தனது தந்தைக்கு கடிதம் எழுதுவதாக காட்சி விரிகிறது.

அவள், கடிதத்தில் தந்தைக்கு என்ன செய்தி சொல்கிறாள் என்பது பின்னணியில் ஒலிக்கிறது... என்னவென்று?

அன்புள்ள அப்பா...

நீங்கள் என்னோடு இல்லையே, உங்களை பார்க்க முடிய வில்லையே என்று நான் வருத்தப்படவில்லை. அம்மாவும் வருத்தப்படவில்லை.

நீங்கள் மும்பையை விட்டு புறப்பட்டு விட வேண்டாம். இங்கு வரவும் வேண்டாம்.

தயவு செய்து, நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் அப்பா...

நீங்கள் அங்கிருந்து வெளியே வந்தால், கொரோனா வைரஸ் வென்று விடும். நாம் கொரோனா வைரசை வீழ்த்துவோம்.

- இப்படி கடிதம் எழுதுகிறாள் மகள்.

இது கொரோனா வைரஸ் பரவுதலின் தீவிரத்தில் இருந்து தனது தந்தையை காக்க வேண்டும் என்ற சின்னஞ்சிறு மகளின் ஏக்கத்தை, தவிப்பை காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த டுவிட்டர் பதிவை பிரதமர் மோடி வெளியிட்டதைத் தொடர்ந்து இது வைரலாக பரவி வருகிறது.

இது வெளியான 3 மணி நேரத்தில் மட்டுமே 2 லட்சத்துக்கும் அதிகமான தடவை பார்க்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் பேர் லைக் தெரிவித்துள்ளனர். 6 ஆயிரம் பேர் ரீடுவிட் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com