

டெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. இந்த தொகுதிகள் 1971 மற்றும் 2001ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2011ம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்து அதன் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி தற்போது உள்ள 543 மக்களவை தொகுதிகள் 850 ஆக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களுக்கு 815 தொகுதிகளும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 தொகுதிகளும் என மொத்தம் 850 தொகுதிகளாக மறுவரையறை மூலம் அதிகரிக்கப்பட உள்ளது.
தொகுதிகளை மறுவரையறை செய்து மக்களவை தொகுதிகளை 850 ஆக உயர்த்தியப்பின் நாடாளுமன்ற மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக தொகுதி மறுவரையறை மசோதா - 2026, 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது.
அதேவேளை தொகுதி மறுவரையறையால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வடமாநிலங்களில் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில் அமித்ஷா பேசியதாவது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், மிகவும் நுட்பமாக பார்த்தால் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் இது நடந்தால்... இப்படி ஏற்பட்டால்.. போன்ற சந்தேகங்களை எழுப்பி மகளிர் இடஒதுக்கீட்டை எதிக்கட்சிகள் எதிர்க்கின்றன. தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பவர்கள் எஸ்.சி, எஸ்.டி தொகுதிகளின் எண்ணிக்கை உயர்வதை எதிர்க்கின்றனர்.
543 தொகுதிகள் அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 13 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். அதேவேளை, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகள் 33 ஆக குறைந்திருக்கும். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. நாங்களில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மக்களவை தொகுதிகளை 50 சதவீதம் உயர்த்தியுள்ளோம்.
தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் குறிப்பாக எந்த தென்னிந்திய மாநிலங்களும் பாதிப்பை சந்திக்காது. ஒவ்வொரு மாநிலமும் நாடாளுமன்றத்தில் நியாமான பிரதிநிதித்துவத்தை பெறும்.
எனக்கு 1 மணிநேர அவகாசம் கொடுங்கள். தொகுதி மறுவரையறையில் அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக 50 சதவீதம் தொகுதிகள் ஒதுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்கிறேன்
என்றார்.