1.5 நிமிடங்களே மக்களவை நடவடிக்கை... சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும்: எம்.பி. ஆவேசம்

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கேட்கிறோம் என பிரியங்கா காந்தி கூறினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை பற்றி விவாதிக்க வேண்டும் என கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. பிரதமர் மோடியும் அதுபற்றி அவையில் விளக்கம் அளித்து பேசினார். இந்நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதனால், அவை நடவடிக்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. டாமன் மற்றும் டையூ தொகுதிக்கான மக்களவை எம்.பி.யாக இருப்பவர் உமேஷ்பாய் பாபுபாய் பட்டேல். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுவதற்கு தன்னுடைய அதிருப்தியை இன்று வெளிப்படுத்தினார்.
இதுபற்றி அவர் இன்று கூறும்போது, அவை செயல்படாமல் முடங்கி போயுள்ளது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது. ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையேயான மோதல் போக்கால் இதுபோன்று நடைபெறுவது வருத்தத்திற்குரியது.
இதனால், என்னால் முக்கிய விசயங்களை பற்றி பேச முடிவதில்லை. இன்றும் கூட மக்களவை 1.5 நிமிடங்களே நடந்தன. நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் போனால் எம்.பி.க்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட வேண்டும். இதனை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
பொதுமக்களின் கடின உழைப்பால் ஈட்டிய பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என ஆவேசத்துடன் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்றும் கூட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த பல்வேறு உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோஷங்களையும் எழுப்பினர்.
அப்போது பிரியங்கா கூறும்போது, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கேட்கிறோம் என கூறினார்.






