மத்திய பிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2½ வயது குழந்தை சாவு

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, ஆக்சிஜன் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது.
மத்திய பிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2½ வயது குழந்தை சாவு
Published on

போபால்,

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன் தேவாசி. இவரது குடும்பத்தினர் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி அருகே உள்ள ஜலாரியா கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை விளையாடிக் கொண்டிருந்த அவருடைய 2½ வயது மகன் பகீரத் எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டான்.

தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக மற்றொரு பள்ளம் தோண்டும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டது. சுமார் 65 அடி ஆழத்தில் குழந்தை பகீரத் சிக்கியிருப்பது தெரியவந்தது. இரவு முழுவதும் மீட்பு பணி நீடித்தது.

சுமார் 40 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், அங்கு கடினமான பாறைகள் தென்பட்டன. இதனால் பொக்லைன் எந்திரங்களால் தொடர்ந்து தோண்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போபால் மற்றும் இந்தூரில் இருந்து வரவழைக்கப்பட்ட நவீன எந்திரங்கள் மூலம் பாறைகள் உடைக்கப்பட்டன.

கேமரா மூலம் குழந்தை கண்காணிக்கப்பட்டு, ஆக்சிஜன் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் சுமார் 23 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று மாலை குழந்தை பகீரத்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்டனர். உடனடியாக அவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com