மத்திய பிரதேசம்: அணையில் படகு கவிழ்ந்து 4 சுற்றுலா பயணிகள் பலி- 10 பேர் மாயமானதால் பரபரப்பு

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் நர்மதை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பார்கி அணையில் 29 சுற்றுலா பயணிகள் ஒரு சொகுசு படகு சவாரியில் ஈடுபட்டனர்.
மத்திய பிரதேசம்: அணையில் படகு கவிழ்ந்து 4 சுற்றுலா பயணிகள் பலி- 10 பேர் மாயமானதால் பரபரப்பு
Published on

ஜபல்பூர்,

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன. இதற்காக சொகுசு படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நர்மதை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் நேற்று 29 சுற்றுலா பயணிகள் ஒரு சொகுசு படகு சவாரியில் ஈடுபட்டனர்.

படகு அணையின் நடுப்பகுதியில் சென்றபோது திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் விழுந்து தத்தளித்தனர். உடனே இதுகுறித்து போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் உள்பட பல்வேறு மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை தொடங்கினர். அவர்கள் வருவதற்குள் 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் மீட்புக்குழுவினர் உள்ளூர்வாசிகள் உதவியுடன் அணையில் தத்தளித்த 15 பேரை உயிருடன் மீட்டனர்.

இந்த சம்பவத்தில் படகில் இருந்த மேலும் 10 பேரை காணவில்லை. நீரில் மூழ்கி மாயமாகி இருக்கும் அவர்களை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். அணையில் படகு கவிழ்ந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி மோகன் யாதவ், கடும் அதிர்ச்சி வெளியிட்டார். மேலும் மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள உள்ளூர் நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டார். இதற்கிடையே சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். பலத்த காற்று காரணமாக நீர் கொந்தளிப்பாக மாறியதால் படகு கவிழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com