

போபால்,
மாநிலங்களவையில் காலியாக உள்ள 27 இடங்களுக்கு வரும் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மத்திய பிரதேசத்தில் 3 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
230 உறுப்பினர் கொண்ட மாநில பேரவையில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற 58 வாக்குகள் தேவை. பாஜகவிடம் 164, காங்கிரசிடம் 64 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் பாஜக 2, காங்கிரஸ் ஓரிடத்தில் எளிதாக வெல்ல முடியும். பாஜக பொதுச் செயலாளர் தருண் சக், மாநிலசெயலாளர் ரஜ்னீஷ் அகர்வால் ஆகியோர் வேட்பாளர்களாக உள்ளனர். பாஜகவிடம் 48 வாக்குகள் உபரியாக இருப்பதால் 3-வது வேட்பாளராக மகேஷ் கெவத் அறிவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் சார்பில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஐதராபாத் நீதிமன்றத்தில் அவர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்கு பற்றி குறிப்பிடப்படாததால் மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. எனவே, பாஜகவின் 3 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில் பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்காக மீனாட்சி நடராஜனின் வேட்பு மனுவை அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி யுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.