5 மணி நேரம் தாமதமாக வந்த ரெயில்.. பிளாட்பாரம் டிக்கெட் வைத்திருந்தவருக்கு ரூ.500 அபராதம் விதிப்பு..!

விதிகள் குறித்து ரெயில்வேயை கடுமையாகச் சாடிய அவர், "இந்தத் தாமதத்திற்கு யார் பொறுப்பேற்பார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
5 மணி நேரம் தாமதமாக வந்த ரெயில்.. பிளாட்பாரம் டிக்கெட் வைத்திருந்தவருக்கு ரூ.500 அபராதம் விதிப்பு..!
Published on

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் ஆதித்யா. இவர் நேற்று முன்தினம் உறவினரை ரெயில் ஏற்றிவிட கல்யாண் ரெயில் நிலையம் சென்றார். ஆனால் அந்த ரெயில் 5 மணி நேரம் தாமதமாக வந்தது. எனினும் ஆதித்யா காத்திருந்து உறவினரை ரெயிலில் ஏற்றிவிட்டு வந்தார்.

இந்தநிலையில் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது டிக்கெட் பரிசோதகர் அவரிடம் சோதனை நடத்தினார். அப்போது ஆதித்யா அவரிடம் இருந்த பிளாட்பாரம் டிக்கெட்டை கொடுத்தார்.

பிளாட்பாரம் டிக்கெட்டை ஆய்வு செய்த பரிசோதகர் அது காலாவதியாகி விட்டதாக ஆதித்யாவுக்கு ரூ.500 அபராதம் விதித்தார். ரெயில் தாமதமாக வந்தது குறித்து விளக்கியும் டிக்கெட் பரிசோதகர் அவருக்கு அபராதம் விதித்து உள்ளார்.

ரெயில்வே விதிகளின்படி பிளாட்பாரம் டிக்கெட் 2 மணி நேரம் மட்டுமே செல்லும். டிக்கெட் வாங்கிய 2 மணி நேரத்துக்குள் பயணி ரெயில் நிலைய பிளாட்பாரத்தை விட்டு வெளியே வந்துவிட வேண்டும். அதை தாண்டி இருந்தால் பயணிக்கு அபராதம் விதிக்கப்படும். அந்த அடிப்படையில் ஆதித்யாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் ரெயில் தாமதமாக வந்த நிலையில் டிக்கெட் பரிசோதகர் தனக்கு அபராதம் விதித்தது குறித்து ஆதித்யா சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் விதிகள் குறித்து ரெயில்வேயை கடுமையாகச் சாடிய அவர், "இந்தத் தாமதத்திற்கு யார் பொறுப்பேற்பார்கள்?" என்று கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

பலர் ஆதித்யாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் ரெயில் தாமதமாக வந்ததற்கு பயணி எப்படி பொறுப்பாக முடியும் என கேள்வி எழுப்பி உள்ளனர். எனவே பிளாட்பார டிக்கெட் விதியை ரெயில்வே ஆய்வு செய்ய வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com