

புதுடெல்லி,
ஒவ்வொரு வீட்டையும் தட்டுங்கள் என்ற இயக்கம் அமலில் உள்ள நிலையில், அனைவருக்கும் தடுப்பூசியின் முதல் டோஸ் போடுவதை உறுதி செய்யுங்கள் என்று மாநிலங்களை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உளளார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் 110 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதே வேளையில் நாட்டின் 12 மாநிலங்களின் 45 மாவட்டங்களில் ஒரு டோஸ் தடுப்பூசியை 50 சதவீதத்துக்கும் குறைவானோர் மட்டுமே பெற்றுள்ளனர். இதுபற்றி அந்த மாவட்ட கலெக்டர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, வீடு வீடாக சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதற்காக ஹர் கர் தஸ்தக் என்ற இயக்கத்தை ( ஒவ்வொரு வீட்டையும் தட்டுங்கள்) மத்திய சுகாதார அமைச்சகம் கையில் எடுத்துள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதுமான கொரோனா தடுப்பூசி நிலைமையை ஆய்வு செய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார மந்திரிகள் கூட்டத்தை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று காணொலி காட்சி வழியாக கூட்டினார். இந்த கூட்டத்தில் மாநில சுகாதார மந்திரிகள் மா.சுப்பிரமணியன் (தமிழ்நாடு), வீணாஜார்ஜ் (கேரளா), கே.சுதாகர் (கர்நாடகம்), ராஜேஷ் தோபே (மராட்டியம்), சத்தியேந்தர் ஜெயின் (டெல்லி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாநிலங்களின் தடுப்பூசி நிலவரத்தை ஆய்வு செய்த மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார மந்திரிகளுக்கு கூறிய ஆலோசனைகள் வருமாறு:-
* 70 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். 38 சதவீதத்தினர் 2-வது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். 12 கோடிக்கும் மேற்பட்டோர் 2-வது டோஸ் தடுப்பூசியை போடவில்லை.
* ஒவ்வொரு வீட்டையும் தட்டுங்கள் என்ற இயக்கம் தொடங்கியுள்ள நிலையில், இதில் நாட்டில் வயது வந்த அனைவரும் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
* கொரோனாவுக்கு எதிரான நமது வலுவான 2 ஆயுதங்கள் தடுப்பூசியும், கொரோனா காலத்துக்குரிய பொருத்தமான கட்டுபாடுகளும்தான். கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. அது முழுவதுமாக முடிவதற்குள் இந்த பாதுகாப்பை குறைத்து விடக்கூடாது.
* தகுதி வாய்ந்த ஒருவர் கூட (18 வயதானோர்) தடுப்பூசி போடாமல் விடுபட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் சென்று, அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களை ஊக்கப்படுத்துங்கள். குழந்தைகள், தங்கள் பெற்றோரை, பிற குடும்ப உறுப்பினர்களை தடுப்பூசி போட ஊக்கப்படுத்த வேண்டும்.
* இலக்கு வைத்துள்ள பகுதிகளில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டு முடிப்பதை தடுப்பூசி தொடர்பான குழுக்கள் உறுதி கொள்ளச் செய்து, அதிகளவு தடுப்பூசிகளை போடுகிற குழுக்களை அடையாளம் கண்டு பாராட்டுவதற்கு ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும்.
* வாரச்சந்தைகளில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இதில் உள்ளூர் மத தலைவர்களை, சமுதாயத்தலைவர்களை, தன்னார்வ தொண்டு அமைப்பினரை பங்கெடுக்கச் செய்யலாம்.
* மாநகரங்களில் பஸ் நிலையங்களில், ரெயில் நிலையங்களில் தடுப்பூசி மையங்களை அமையுங்கள்.
* ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரிவினரை சென்றடைய வேண்டும். ஒரு நாள் வர்த்தகர்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள், தெரு வியாபாரிகள் உள்ளிட்டவர்களை குறிவைத்து தடுப்பூசி போட அர்ப்பணிக்கலாம். ஒரு நாள் ஆட்டோ டிரைவர்கள், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனர்களை இலக்காக கொள்ளலாம். ஒரு நாளில் விவசாயிகள், தொழிலாளிகளை இலக்காக கொள்ளலாம்.
* கொரோனா முடிந்து விட்டதாக கருதி விடாதீர்கள். உலகளவில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர், இங்கிலாந்து, ரஷியா, சீனா ஆகிய நாடுகளில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டும்கூட தொற்று பரவல் அதிகரித்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும். தடுப்பூசிகளையும் கொரோனா கால கட்டுப்பாடுகளையும் விடாமல் பற்றிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாநில சுகாதார மந்திரிகளுக்கும், செயலாளர்களுக்கும், திட்ட இயக்குனர்களுக்கும் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா ஆலோசனைகள் வழங்கினார்.