மணிப்பூர் வன்முறை: 60 பேர் பலி, 1,700 வீடுகள் தீ வைத்து எரிப்பு; முதல்-மந்திரி பேட்டி

மணிப்பூர் வன்முறையில் 60 பேர் பலியாகி உள்ளனர் என்றும் 1,700 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன என்றும் முதல்-மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.
மணிப்பூர் வன்முறை: 60 பேர் பலி, 1,700 வீடுகள் தீ வைத்து எரிப்பு; முதல்-மந்திரி பேட்டி
Published on

இம்பால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பழங்குடி சமூகம் அல்லாதோரான இவர்களுக்கும், பழங்குடி பிரிவினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது.

கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் உள்ளனர்.

நிலைமை அத்துமீறி சென்ற நிலையில், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில், 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும் அரசு அமல்படுத்தியது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டது.

அதிரடி விரைவு படையினரும், ராணுவம் மற்றும் துணை ராணுவம் படையினரும் கூடுதல் பாதுகாப்பிற்காக மணிப்பூரின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டனர். ஆயுதமேந்திய வீரர்களின் உதவியுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

மணிப்பூர் வன்முறையில் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ஆயுத படை உதவியுடன் இதுவரை 23 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மணிப்பூரில் நீட் தேர்வை தள்ளி வைத்து, தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.

இதன்பின்பு, மணிப்பூரில் நேற்றும், இன்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த இரு நாட்களிலும் மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில், மணிப்பூர் முதல்-மந்திரி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, மணிப்பூரில் வன்முறைக்கு அப்பாவி பொதுமக்கள் 60 பேர் பலியாகி உள்ளனர். 231 பேர் காயமடைந்து உள்ளனர்.

1,700 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன. மாநிலத்தில் அமைதியை கொண்டு வரும்படி மக்களிடம் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன். வன்முறையை முன்னிட்டு, வெவ்வேறு இடங்களில் இருந்து பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு சிறந்த முறையில் கவனிப்பு மற்றும் ஆதரவு வழங்கப்பட்டது.

பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை, அவர்களுடைய சொந்த இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கி உள்ளன.

சம்பவம் நடந்த நாள் முதல் இன்று வரை நிலைமை பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கண்காணித்து வருகிறார். அவர் பல மத்திய படை கம்பெனிகளை அனுப்பி உள்ளார் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com