

புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள மால்வியா நகர் பகுதியில் உள்ள பூங்காவிற்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மணிப்பூரை சென்ற இளம்பெண் ஒருவர் தனது தோழியுடன் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் தங்கள் செல்போனில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு நின்றிருந்த சிறுவர்கள் சிலர், மணிப்பூர் பெண்ணை நோக்கி ஆபாசமான வார்த்தைகளை கூறி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அந்த சிறுவர்களை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுவர்கள் மணிப்பூர் பெண்ணின் தோற்றத்தை வைத்து இன ரீதியான வசைச் சொற்களை கூறி இழிவுபடுத்தியுள்ளனர்.
இதையடுத்து இளம்பெண்ணும் அவரது தோழியும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல முயன்றனர். ஆனால் அந்த சிறுவர்கள் இருவரையும் பிடித்து கீழே தள்ளிவிட்டு, அவர்களை தாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், அங்கிருந்த ஒரு சிறுவன் தனது இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை கழற்றி, மணிப்பூர் பெண்ணை அடித்துள்ளார். இதில் அந்த பெண்ணின் முகம் மற்றும் காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
அந்த பெண்கள் இருவரும் தங்களை விட்டுவிடுமாறு சிறுவர்களிடம் கெஞ்சியுள்ளனர். ஆனால் அவர்கள் விடாமல் அப்பெண்களை தாக்கியுள்ளனர். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவரகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
பின்னர் காயமடைந்த பெண்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்கள் அழித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 7-ம் வகுப்பு மாணவர் உள்பட 4 சிறுவர்களை அதிரடியாக கைது செய்தனர். அதில் 3 பேர் பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற சிறுவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.