மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: வீதிகளில் போராடக் கூடாது- மும்பை ஐகோர்ட்டு அதிரடி

வீதிகளில் போராட்டம் நடத்தும் போராட்டக்காரர்கள் நாளை மதியத்துக்குள் காலி செய்ய வேண்டும் என மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: வீதிகளில் போராடக் கூடாது- மும்பை ஐகோர்ட்டு அதிரடி
Published on

மும்பை,

ஓபிசி பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதோடு, மராத்தாக்களை குன்பிகளின் துணை சாதியாக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கோரித்து, மனோஜ் ஜாரங்கி ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.அவருக்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்துள்ள மராத்தா ஆதரவாளர்கள் ஆசாத் மைதானத்திலேயே அல்லாமல் சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினல் மற்றும் பல்வேறு சாலைகள், பொது இடங்களில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தெற்கு மும்பை பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு எதிராக மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரவீந்திர குகே, கவுதம் அன்காட் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பிரேந்திர சரப் ஆகஸ்ட் 29-ந் தேதி வரை மட்டுமே போராட்டம் நடத்த மனோஜ் ஜராங்கேவுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்றார். மேலும் அரசின் எல்லா நிபந்தனைகளையும் ஜராங்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீறிவிட்டதாக கூறினார்.

இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள், " போராட்டக்காரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசாத் மைதானத்தில் மட்டும் இல்லை. இது எப்படிபட்ட அமைதியான போராட்டம் என்பதை நாங்கள் பார்த்தோம். ஐகோர்ட்டு கட்டிடம் கூட போராட்டக்காரர்களால் சூழப்பட்டு இருந்தது. நீதிபதிகள், வக்கீல்கள் செல்லும் நுழைவு வாயில் மறிக்கப்பட்டது. ஐகோர்ட்டு நீதிபதிகளின் கார் மறிக்கப்பட்டு விசாரணைக்கு வருவது தடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த நகரரும் ஸ்தம்பித்தது. போராட்டக்காரர்கள் சி.எஸ்.எம்.டி. மைதானத்தில் ஏன் இருக்கவில்லை?. அவர்கள் ஏன் அங்கும், இங்கும் சுற்றுகிறார்கள்?. அவர்கள் தென் மும்பையின் முக்கிய பகுதிகளை முடக்கி உள்ளனர். போராட்டக்காரர்கள் முக்கிய இடங்களான சி.எஸ்.எம்.டி., சர்ச்கேட் ரெயில் நிலையங்கள், மெரின் டிரைவ் கடற்கரை, ஐகோர்ட்டு வளாகத்திலும் கூட கூட்டம் கூடி உள்ளனர். போராட்டம் அமைதியாக நடைபெறவில்லை.

ஆசாத் மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வழங்கப்பட்ட அனுமதியின் ஒவ்வொரு நிபந்தனைகளையும் மனோஜ் ஜராங்கே மற்றும் மற்ற போராட்டக்காரர்கள் மீறி உள்ளனர். போராட்டக்காரர்கள் நாளை மதியத்துக்குள் வீதிகளை காலி செய்ய வேண்டும் ஆகஸ்ட் 27-ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, போராட்டக்காரர்கள் ஆசாத் மைதானத்தில் அமர்ந்து போராடலாம். வேறு பகுதிகளில் போராடக்கூடாது" என்று உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com