

பெங்களூரு,
கர்நாடக முதல் மந்திரி டி.கே.சிவக்குமார், சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இன்று பெங்களூரு திரும்பினார். அவரிடம், முதல்-அமைச்சர் விஜய்யுடனான சந்திப்பு குறித்தும், மேகதாது விவகாரம் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து டி.கே.சிவக்குமார் பேசியதாவது;
”சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டபடி தமிழகத்திற்கு 177 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க கர்நாடகா உறுதிபூண்டுள்ளது. இந்தத் திட்டம் இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும். அதிமுக, திமுக அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.. அவர்கள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைப் பார்த்தார்களா? அவர்களுக்கு நாம் 177 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தெளிவாகக் கூறுகிறது. அது நமது பொறுப்பு, அதை நாம் செய்வோம்.
நானும், முதல்-அமைச்சர் விஜய்யும் நண்பர்கள். நாங்கள் ஒரு பொது மையத்தில் இருக்கிறோம். இருவருக்கும் தங்களுடைய சொந்த அரசியல் நிர்ப்பந்தங்கள் உள்ளன. அரசியல் வேறுபாடுகள் சுமூகமான உறவுகளுக்குத் தடையாக இருக்கக்கூடாது.
கர்நாடகாவின் எதிர்ப்பு ஏதுமின்றி தமிழகமும் ஆறுகளின் குறுக்கே அணைகளையும் தடுப்பணைகளையும் கட்டி வருகிறது. நாங்கள் யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அனைவருக்கும் இந்தத் திட்டத்தை ஆதரிக்கும் பொறுப்பு உள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.