

பெங்களூரு,
பெங்களூருவில் கர்நாடக முதல்-மந்திரி சிவக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
பொதுமக்களின் குறைகளைக் கவனிப்பதற்காக ஒரு செயலாளர் நியமிக்கப்படுவார், மேலும் அந்தப் பொறுப்பு ஒரு அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான செயலகத்தை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபடுமாறு அதிகாரிகளிடம் நான் கேட்டுக்கொண்டுள்ளேன். சுதந்திரமான மற்றும் நியாயமான ஆட்சியை உறுதி செய்வதற்காக, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாக வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.
அனைத்துத் துறைகள் குறித்தும் 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு அனைத்து அதிகாரிகளையும் நான் கேட்டுக்கொண்டுள்ளேன். வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த அறிக்கைகளைக் கேட்டுள்ளேன். மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச்சீட்டு வழங்கப்படும்.
30,40 ஆண்டுகளாக மேகதாது அணைக்கு தமிழகத்தில் தொடர் எதிர்ப்பு இருந்து வருகிறது. இதில் புதியதாக எதுவும் இல்லை. மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து அரசியல் செய்கிறார்கள். அணை விவகாரம் தற்போது முழுமையாக மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. அணை விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. சட்டம், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி செயல்படுகிறோம். அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை வாரியம், மத்திய அரசு ஆய்வு செய்கிறது.