

புதுடெல்லி,
அமைச்சகம் வழங்கிய ஆலோசனைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று 'மெட்டா' நிறுவனத்துக்கு மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டில் நடக்கும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு (எஸ்.ஐ.ஆர்.) எதிராக டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.ஐ.ஆர். பணியில் முறைகேடு நடப்பதாகவும், அதனால் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரியும், எஸ்.ஐ.ஆர். பணிகளை ரத்து செய்யக்கோரியும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் (முகநூல்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரச்சினைகளை தவறான கண்ணோட்டத்துடன் கொண்டு செல்லும் வகையிலான கருத்துக்கள், வீடியோக்கள் பகிரப்பட்டன. அவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் புகார்கள் குவிந்தன.
இதையடுத்து வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை வழங்கி வரும் நிறுவனமான 'மெட்டா' நிறுவனத்திடம் மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது மத்திய அரசின்கீழ் தொழில்நுட்ப நிறுவனங்களை கட்டுப்படுத்த எலெக்ட்ரானிக் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்மூலம் சமூக வலைதளங்களை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு ஆலோசனைகள், வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளன.
அவற்றை முறையாக நீங்கள் (மெட்டா நிறுவனம்) பின்பற்றுகிறீர்களா? என்று மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது. அவ்வாறு பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதற்கு பதில் கொடுத்துள்ள மெட்டா நிறுவனம், 'வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பகிரப்படும் அனைத்து தகவல்கள், படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவை வலிமையான குழுக்கள் மூலம் ஆராயப்பட்டு, அவற்றின் தீவிரத்தை உணர்ந்து அறிந்து அதன்பிறகே பகிரப்படுகிறது. அரசு அறிவுறுத்திய அனைத்து வழிகாட்டுதல்கள் முறையின்படியே செயல்படுகிறோம். மக்களை குழப்பும், அச்சமூட்டும், கலவரத்தை தூண்டும் அல்லது தொந்தரவு கொடுக்கும் நோக்கம் எங்களுக்கு (மெட்டா நிறுவனம்) இல்லை.
அனைத்து தகவல்களையும் நாங்கள் ஒரே மாதிரியாக பார்த்து வெளியிடுவதில்லை. அதன் உண்மைத்தன்மை, தீவிரம் ஆகியவற்றை அறிந்த பின்பே வெளியிடுகிறோம்' என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக எலெக்ட்ரானிக் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் விசாரித்து வருகிறது.