

மும்பை,
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட 787 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், பல்வேறு நாடுகள் தங்கள் வான்பரப்பை மூடியுள்ளன.
இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளுக்கான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். பல்வேறு வளைகுடா நாடுகள் தங்கள் வான்பரப்பை மூடியுள்ளதால் இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு செல்லும் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகிய 4 நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் இன்று 259 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் மத்திய கிழக்கு நாடுகள் செல்லும் விமானங்கள் ஆகும்.