சென்னையில் ஒரு ஆண்டாக காணாமல் போனவர் திருப்பதி பிரம்மோற்சவத்தில் மீட்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா திருமலையில் தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் ஒரு ஆண்டாக காணாமல் போனவர் திருப்பதி பிரம்மோற்சவத்தில் மீட்பு
Published on

திருமலை,

சென்னையில் ஒரு வருடத்திற்கு முன்பு மாயமான நபர், திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் திருப்பதி மாவட்ட காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஒரு ஆண்டுக்கு முன் மாயம்

சென்னை பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு திடீரென வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். அவர் சென்னை கோயம்பேடு சந்தையில் கூலி வேலை செய்து வந்ததும், அதில் போதிய வருமானம் கிடைக்காததால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த அவர் 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது மனைவி, குழந்தைகளிடம் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போய் விட்டதாக தெரிய வந்தது.

புகார்

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் சென்னை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், ஓராண்டாகியும் எந்தவொரு துப்பும் கிடைக்காமல் இருந்தது.

திருப்பதி பிரம்மோற்சவத்தில் மீட்பு

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா திருமலையில் தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், அங்குள்ள கூட்ட மேலாண்மை மற்றும் கட்டளை கட்டுப்பாட்டு மைய சிசிடிவி கேமராக்கள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகப்படும்படியாக சுற்றி கொண்டிருந்த ஒரு நபரை மீட்டு போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். தொடர்ந்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் சென்னையில் இருந்து வந்து ஓராண்டாக காணாமல் போனவர் என்பது தெரியவந்தது.

குடும்பத்தினருடன் கண்ணீர் மல்க இணைந்தார்

இதையடுத்து திருப்பதி போலீசார் உடனடியாக சென்னை காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டனர். தகவல் அறிந்து சென்னை மற்றும் திருமலைக்கு விரைந்து வந்த குடும்பத்தினர், ஓராண்டாக காணாமல் போன தங்கள் உறவினரை நேரில் கண்டதும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com