ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் மோடி பேச்சு

ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் மோடி பேச்சு
Published on

புதுடெல்லி

செயற்குழு கூட்டம்

டெல்லியில், பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. கட்சி தலைவர் அமித் ஷா, கூட்டத்தை தொடங்கிவைத்தார். அதில், பா.ஜனதாவின் கடந்த ஓராண்டு கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட கட்சியின் 1,400 எம்.எல்.ஏ.க்கள், 337 எம்.பி.க்கள், அனைத்து எம்.எல்.சி.க்கள், மாநில முதல்-மந்திரிகள், மாநில தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

நாட்டில் நிலவும் வறுமை, பயங்கரவாதம், சாதி, வகுப்புவாதம், ஊழல் ஆகியவற்றை ஒழித்து பிரதமரின் புதிய இந்தியா-2022 என்ற கனவை நிறைவேற்ற பா.ஜனதா முழு ஒத்துழைப்பு தருவது.

கருப்பு பணத்தை ஒழிக்க உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு அறிவிப்பு மற்றும் வெளிப்படையான வர்த்தகத்தை மேற்கொள்ள நாடு முழுவதும் ஒரே வரியான ஜி.எஸ்.டி. வரியை கொண்டு வந்த மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது.

ரோஹிங்யா அகதிகள் பிரச்சினையில் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தருவது. டோக்லாம் பிரச்சினையில் இந்தியா மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிப்பது.

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பாகிஸ்தானை சர்வதேச நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்திய மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

வாரிசு அரசியல்

அமித்ஷா உரை குறித்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியதாவது:-

இந்தியாவில் வாரிசு அரசியல் நடைபெறுவது உண்மை என வெளிநாட்டில் ராகுல் காந்தி பேசி உள்ளதற்கு அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியில் தான் அந்த கலாசாரம் உள்ளது. ஆனால் பா.ஜனதாவில் செயல்திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே உயர் இடத்தை பெற்று உள்ளனர் என்று ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டதால் மக்கள் நலத்திட்டங்கள் நேரடியாக உரியவர்களுக்கு சென்றடைகிறது. இதன் மூலம் ரூ.60 ஆயிரம் கோடியை அரசு சேமித்து உள்ளது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் போலி புகைப்பட குற்றச்சாட்டுக்கு சரியான பதில் கொடுத்து மூக்குடைத்த மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்தார்.

இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.

ஊழல்

பிரதமர் மோடியின் உரை குறித்து மத்திய மந்திரி அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என பிரதமர் உறுதிபட தெரிவித்து உள்ளார். ஊழல் கறை உள்ளவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் அவர் எச்சரித்தார்.

பொழுதுபோக்காக அரசியல் நடத்தியதால் தான் காங்கிரஸ் கட்சி தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருக்கிறது. அரசு மீதும், தன் மீதும் தரம் தாழ்ந்த சொற்களை பயன்படுத்துவதன் மூலம் அரசுக்கு எந்த களங்கத்தையும் ஏற்படுத்தி விட முடியாது என மோடி கூறினார்.

ஜனநாயகம் என்பது தேர்தல் வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டது. பா.ஜனதா அரசு மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் மட்டுமே செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com