

டெல்லி,
கச்சா எண்ணெய் விலை , டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகள் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை, 5 மாநில தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் நிறைவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் லிட்டருக்கு தலா ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 103.98க்கு, டீசல் ஒரு லிட்டர் ரூ. 95.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
மத்திய அரசின் தவறுக்கு பொதுமக்கள் விலை கொடுக்கின்றனர். பெட்ரோல், டீசல் லிட்டருக்கு தலா ரூ. 3 விலை உயர்வு என்ற அதிர்ச்சி ஏற்கனவே வந்துவிட்டது. பாக்கி தொகையை தவணை முறையில் எடுத்துக்கொள்வார்கள்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.