நாடாளுமன்ற தேர்தலில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள்; மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

தொகுதி மறுவரையறை மசோதா வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது
நாடாளுமன்ற தேர்தலில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள்; மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
Published on

டெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. இந்த தொகுதிகள் 1971 மற்றும் 2001ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2011ம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்து அதன் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டது.

அதன்படி தற்போது உள்ள 543 மக்களவை தொகுதிகள் 850 ஆக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.மாநிலங்களுக்கு 815 தொகுதிகளும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 தொகுதிகளும் என மொத்தம் 850 தொகுதிகளாக மறுவரையறை மூலம் அதிகரிக்கக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தொகுதிகளை மறுவரையறை செய்து மக்களவை தொகுதிகளை 850 ஆக உயர்த்தியப்பின் நாடாளுமன்ற மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டது. இது தொடர்பாக தொகுதி மறுவரையறை மசோதா - 2026, 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த தொகுதி மறுவரையறையால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வடமாநிலங்களில் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இதனிடையே, தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் மீதும் மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் 528 எம்.பி.க்கள் பங்கேற்ற நிலையில் மசோதாக்களுக்கு 298 பேர் ஆதரவும், 230 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

மசோதா வெற்றிபெற 3ல் 2 பங்கு ஆதரவு அதாவது 352 எம்.பி.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 298 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரவு அளித்தனர். இதனால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது.

அதேவேளை, சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 2023ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை நேற்று மத்திய அரசு அரசாணையாக வெளியிட்டது. அதேவேளை, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் மட்டுமே மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு சட்டம் அமலுக்கு வரும் என்று மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படாதவரை ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே அமலில் இருக்கும் என்றும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2029 நாடாளுமன்ற தேர்தலில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய பாஜக அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

தொகுதி மறுவரையறை மசோதாவை மகளிர் இடஒதுக்கீட்டுடன் இணைந்து பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மேற்கொண்ட தீய முயற்சி மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது. அரசியலமைப்பு சாசனம், கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகம் வெற்றிபெற்றது. 543 தொகுதிகளுக்கும் 2029ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஏற்கனவே அமலில் உள்ள 33 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமல்படுத்த வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com