'பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள் என்பதை மோடி புரியவைத்துள்ளார்' - ஜகதீப் தன்கர்


பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள் என்பதை மோடி புரியவைத்துள்ளார் - ஜகதீப் தன்கர்
x

Image Courtesy : ANI

பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை நாம் பாராட்ட வேண்டும் என ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

பனாஜி,

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.

இந்த நிலையில், பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டு அழிக்கப்படுவார்கள் என்பதை ஆபரேஷன் சிந்தூர் மூலம் மோடி புரியவைத்துள்ளார் என துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவா கவர்னர் மாளிகையில் பண்டைய இந்திய அறிஞர்கள் சரகா மற்றும் சுஸ்ருதா ஆகியோரின் வெண்கல சிலைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"பாரதம் இப்போது மிகவும் வித்தியாசமாக உள்ளது. பாரதம் தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் இருக்கிறது. பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம், பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற செய்தியை நமது அண்டை நாடுகளுக்கு மட்டுமின்றி, முழு உலக சமூகத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடி அனுப்பியுள்ளார்.

பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும், அவர்கள் வேட்டையாடி அழிக்கப்படுவார்கள் என்பதை மோடி புரியவைத்துள்ளார். அதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' தேவைப்பட்டது. அதை நிறைவேற்றியதற்காக நமது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நாம் பாராட்ட வேண்டும்.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது இலக்கு துல்லியமாக கணக்கிடப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய ஆயுதப் படைகளின் வலிமையை உலகம் ஒப்புக்கொண்டது. இந்த நடவடிக்கையின் தாக்கம் குறித்து உலக நாடுகளிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

யாரும் இது குறித்து ஆதாரம் கேட்கவில்லை. ஏனெனில் பயங்கரவாதிகளின் சவப்பெட்டிகள் எடுக்கப்பட்டபோது, அங்கு பாகிஸ்தான் ராணுவம் இருந்தது, பயங்கரவாதிகள் இருந்தனர், பாகிஸ்தான் அரசாங்கமும் இருந்தது. நமது நாட்டை பெருமைப்படுத்திய நமது ஆயுதப் படைகளை வணங்குகிறேன்."

இவ்வாறு ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

1 More update

Next Story