

கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 152 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 29 ஆம் தேதி 142 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அனல் பறக்க பிரசாரம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், இன்று பனிஹாடி பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: மேற்கு வங்காளத்தில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மாற்றத்திற்கான அலையை காண முடிந்தது.
நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு அதை வெளிப்படுத்தியுள்ளது. பாஜ.க.வுக்கு ஆதரவாக வெளிப்பட்ட ஆதரவு, அதன் வெற்றி நாதத்தை முழங்கியுள்ளது. மேற்கு வங்காளத்தில் தனது சர்வாதிகாரத்தால் ஜனநாயகம் எனும் கோவிலை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உடைக்கிறது. ஜனநாயகம் என்ற அந்த கோவிலை மீண்டும் கட்டமைக்க மக்கள் தொடங்கியுள்ளனர். இரண்டாவது கட்ட தேர்தலில் இந்த கோவில் மீது வெற்றிக்கொடியை பறக்க விட வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்.