பாஜக தலைவர் நிதின் நபினுடன் கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி சந்திப்பு: அரசியலில் களமிறங்குகிறாரா?

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அம்ரோஹா தொகுதியில் பாஜக சார்பில் அவர் போட்டியிடலாம் என்றும் பேசப்படுகிறது.
முகம்மது ஷமி
Published on: 

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பாஜக தேசிய தலைவர் நிதின் நபீனை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள நிதின் நபீனின் அலுவலகத்தில் நேற்று இரவு இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய தலைவர் குன்வர் பாசித் அலியும் உடனிருந்தார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து முகமது ஷமி பாஜகவில் இணைய உள்ளதாகவும், உத்தரபிரதேச மாநில அரசியலில் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகவில் இணைகிறாரா?

குறிப்பாக, 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அம்ரோஹா தொகுதியில் பாஜக சார்பில் அவர் போட்டியிடலாம் என்றும் பேசப்படுகிறது. மேலும், பாஜகவின் சிறுபான்மையினர் அணியில் அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் ராஷ்டிரிய லோக் தளம் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரியையும் முகமது ஷமி சந்தித்திருந்தார்.

அப்போதும் அவர் அரசியலுக்கு வருவதாக தகவல்கள் பரவின. இருப்பினும், முகமது ஷமி பாஜகவில் இணைவது குறித்து அவரோ அல்லது பாஜக தலைமையோ இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை

X