புதிய உருமாறிய கொரோனா குறித்து கண்காணிப்பு அவசியம்; ஐ.சி.எம்.ஆர். முன்னாள் தலைவர் தகவல்

நாடு முழுவதும் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தலைதூக்கி வருகிறது.
புதிய உருமாறிய கொரோனா குறித்து கண்காணிப்பு அவசியம்; ஐ.சி.எம்.ஆர். முன்னாள் தலைவர் தகவல்
Published on

புதுடெல்லி,

புதிய உருமாறிய கொரோனாவான 'எக்ஸ்.எப்.ஜி' குறித்து கண்காணிப்புடன் இருப்பது அவசியம் என்று ஐ.சி.எம்.ஆர். முன்னாள் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தலைதூக்கி வருகிறது. கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டி விட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 300-க்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 'எக்ஸ்.எப்.ஜி.' என்ற புதிய உருமாறிய கொரானாவும் பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா கூறியதாவது:-

புதிய உருமாறிய கொரோனா 'எக்ஸ்.எப்.ஜி.' உருவெடுத்திருப்பது, கொரோனாவை உண்டாக்கும் சார்ஸ்-கோவிட்-2 வைரசின் இயற்கையான பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கம்தான்.எக்ஸ்.எப்.ஜி., மனித செல்களுடன் பிணைக்கும் திறனை மேம்படுத்தக்கூடிய மற்றும் நோயெதிர்ப்பு பாதுகாப்புகளை தவிர்க்கக்கூடிய பிறழ்வுகளை கொண்டுள்ளது.

ஆரம்பகால தகவல்கள், இந்த உருமாறிய கொரோனாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறன் அதிகமாக இருப்பதாக கூறுகின்றன, ஆனால் நோயின் அதிகரித்த தீவிரத்தை குறிக்க தற்போதைய ஆதாரங்கள் எதுவும் இல்லை. இப்போது, கண்காணிப்பு முக்கியம். பீதியடைய தேவையில்லை. அறிகுறிகள் தெரியும்போது, சோதனை செய்ய வேண்டும். கூட்டம் நிறைந்த இடங்களில் முக கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com