மும்பையில் பருவமழை தீவிரம்; ரெட் அலர்ட் அறிவிப்பு

இடி, மின்னலுடன் கூடிய தீவிர மழை பெய்யும். மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
மும்பையில் பருவமழை தீவிரம்; ரெட் அலர்ட் அறிவிப்பு
Published on

மும்பை

மும்பையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ரெட் அலர்ட் வெளியிடப்பட்டு உள்ளது.

அரபிக்கடலின் மத்திய பகுதி மும்பை உள்ளிட்ட மராட்டியத்தின் பல்வேறு பகுதிகள், தெலுங்கானா, ஒடிசா, சத்தீஷ்கார், ஜார்கண்ட், பீகார் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், மும்பையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என்று அறிவித்து உள்ளது.

தள்ளிப்போன பருவமழை

வழக்கம்போல் ஜூன் 10-ந்தேதி பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த முறை தள்ளிப்போனது. 2023-ம் ஆண்டும் ஜூன் 25-ந் தேதி பருவமழை தொடங்கியிருந்தது. இதேபோல வரலாற்றில் மிகவும் தாமதமாக 1958, 1974-ம் ஆண்டுகளில் ஜூன் 28-ந்தேதி பருவமழை தொடங்கியது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், 13 நாட்களுக்கு பின்னர் நேற்று இரவில் மும்பையில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. கனமழையால் நகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

ரெட் அலர்ட்

கனமழையை முன்னிட்டு, மும்பை மற்றும் அருகேயுள்ள பால்கர் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இடி, மின்னலுடன் கூடிய தீவிர மழை பெய்யும். மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

ஆரஞ்சு அலர்ட்

இதேபோன்று கனமழையை முன்னிட்டு, தானே மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நகரில் மழை பெய்து வருகிறது. இதில் நேற்று 3-வது நாளாக நகரில் மழை கொட்டி தீர்த்தது. காலை 7 மணியளவில் தொடங்கிய மழை இடைவிடாமல் மிதமாக பெய்தது. பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேல் மழை இடைவிடாமல் தூறிக்கொண்டே இருந்தது. பிற்பகல் நேரத்தில் நகரில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. ஒரு சில இடங்களிலும் மிதமான அளவிலும், பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் பெய்தது.

மும்பையில் 3-வது நாளாக மழை பெய்த போதிலும், ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8.07 சதவீதம் தண்ணீர் உள்ளது. மும்பையில் நேற்று மழை பெய்த போதிலும் சாலை, ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெஸ்ட் பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com