குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு - உள்துறை அமைச்சர் தகவல்

மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.
Image Courtacy: ANI
Image Courtacy: ANI
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது.

அந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சிதிலம் அடைந்த அந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, மக்களின் பயன்பாட்டுக்காக குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26-ந் தேதி பாலம் திறந்துவைக்கப்பட்டது.

இந்தநிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை 6.30 மணி அளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த நிலையில், சிலர் மீட்கப்பட்டதாகவும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும் அத்தொகுதி எம்.எல்.ஏ.வும், மந்திரியுமான பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்தார்.

ஆற்றில் விழுந்த சிலர் அங்கிருந்த வயரை பிடித்தபடி உயிர் பிழைத்ததாகவும், அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதே விபத்துக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாலம் அறுந்தபோது சுமார் 100 பேர் பாலத்தில் இருந்ததாகவும், ஆற்றில் விழுந்த அவர்களில் 40 பேர் வரை மீட்கப்பட்டு விட்டதாகவும் மாநில போலீஸ் டி.ஜி.பி. ஆசிஷ் பாட்டியா கூறினார்.

ஆற்றுக்குள் விழுந்தவர்களில் 60 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் என்று தெரிகிறது. நீரில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, விரைவில் உயிரிழப்புகள் எண்ணிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவேன். நிர்வாகக் குழுவிற்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பாலத்தின் நிர்வாகக் குழு மீது ஐபிசியின் 304, 308 மற்றும் 114 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த விபத்து பற்றி கேள்விப்பட்ட பிரதமர் மோடி, குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேலை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். மீட்புப்பணிக்கு குழுக்களை அவசரமாக திரட்டுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் அளிக்குமாறும் வலியுறுத்தினார். குஜராத்தில் முகாமிட்டுள்ள பிரதமர் மோடி, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் பூபேந்திர படேலை தொடர்பு கொண்டு பேசினார்.

பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு குஜராத் அரசு சார்பில் தலா ரூ.4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பூபேந்திர படேல் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com