

புதுடெல்லி,
தீபாவளியை முன்னிட்டு ராமபிரான் பிறந்த அயோத்தியில் தீப உற்சவம் கொண்டாடப்படுகிறது. இது ஆண்டுதோறும் பிரமாண்டமாக ஒளித்திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 14 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு ஸ்ரீராமர், சீதை மற்றும் லட்சுமணனுடன் அயோத்திக்குத் திரும்பியதை வரவேற்கும் விதமாக இந்த விழா தீபாவளியையொட்டி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டின் பிரதான தீப ஒளித்திருவிழா நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றன. இதையொட்டி ராமாயணக் கதைகளை மையமாகக் கொண்ட 18 அலங்கார ஊர்திகள் பங்கேற்ற பிரமாண்ட சோபா யாத்திரை இன்று காலை தொடங்கியது. ஊர்வலம் அயோத்தியின் புகழ்பெற்ற சாகேத் மகா வித்யாலயாவில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மதியம் ராம் கதா பூங்காவை அடைந்தது. ராமாயணத்தின் காவியக் கதைகளை உலகிற்குப் பறை சாற்றும் வகையில் 18 பிரமாண்ட அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன.
ஸ்ரீராமரின் பிறப்பு, விஸ்வாமித்திரருடன் யாகம் காத்தல், சீதா கல்யாணம், வனவாசம், லங்கா தகனம், மற்றும் ராவண வதம் போன்ற முக்கிய காட்சிகள் தத்ரூபமான சிலைகள் மற்றும் வண்ணமயமான அலங்காரங்களுடன் இந்த ஊர்திகளில் காட்சிப்படுத்தப்பட்டன. தகவல் தொழில் நுட்பம் மற்றும் நவீன கலை நுணுக்கங்களைப் பயன்படுத்தி இந்த ஊர்திகள் உத்தரப்பிரதேச கலாச்சாரத் துறையால் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டன.
இந்த யாத்திரையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களின் பிராந்திய நடனங்கள் மற்றும் இசை வாத்தியங்களுடன் பங்கேற்றார்கள்.
மேலும், கம்போடியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற 12-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச ராமலீலா கலைஞர்களும் இந்த ஊர்வலத்தில் ராமாயணக் கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து அணிவகுத்துச் சென்றனர்.
இந்த சோபா யாத்திரை மதியம் ராம் கதா பூங்காவை அடைந்ததும், அங்கிருந்து தீப உற்சவத்தின் அடுத்த முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. ஊர்வலத்தின் தொடர்ச்சியாக ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணர் வேடமிட்ட கலைஞர்கள் ஹெலிகாப்டர் (புஷ்பக விமானம்) மூலம் இறங்கி வர, அவர்களுக்கு முறைப்படியான அரியணை ஏறும் ராஜ்யாபிஷேக விழா மேடையில் நடத்தப்பட்டது.
அயோத்தி வீதிகளில் பயணிக்கும் இந்த சோபா யாத்திரையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் சாலையின் இருமருங்கிலும் திரண்டு நின்று மலர்களைத் தூவி வரவேற்றனர்.
இந்தநிலையில், 10வது தீப உற்சவம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், சரயு நதிக்கரையில் தீப ஆராதனை செய்து வழிபாடு நடத்தினார்.
முக்கிய நிகழ்வாக, சரயு நதிக்கரையில் 30 லட்சம் விளக்குகள் ஏற்பட்டன. தன்னார்வலர்கள், பக்தர்கள், பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு 25 லட்சம் விளக்குகள் ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 5 லட்சம் விளக்குகள் ஏற்றி, சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீபத்திருவிழாவால் அயோத்தி நகரம் முழுவதும் விளக்கு ஒளியில் ஜொலிக்கின்றன.
லேசர் லைட்டுகள், டிரோன்களின் மூலம் ராமாயண வரலாறுகள் காட்சிப்படுத்தப்பட்டன. இது பார்ப்போரை பரவசமடையச் செய்தது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், உத்தரபிரதேச கவர்னர் அனந்திபென் படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிதாகக் கட்டப்பட்ட பிரம்மாண்ட ஸ்ரீ ராம் ஜென்மபூமி வளாகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டு தெய்வீக ஒளியில் ஜொலிக்கிறது. மேலும் ராமாயணத்தின் முக்கிய காட்சிகளையும், பிரபு ஸ்ரீராமர் அயோத்திக்குத் திரும்பும் காட்சியையும் விவரிக்கும் வகையில் 2,100 டிரோன்களைக் கொண்டு பிரமாண்ட வான்வெளி ஒளிக்காட்சியும், 3டி லேசர் காட்சிகளும் நடத்தப்பட்டன.