

லக்னோ,
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உத்தரபிரதேச மாநிலம் மைன்புரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று முன்தினம் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதில் அவர், தனக்கு அசையும், அசையா சொத்து மதிப்பு ரூ.16.52 கோடி இருப்பதாகவும், இது கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் குறிப்பிட்டதை விட ரூ.3.20 கோடி குறைவு என்றும், ஐ.பி.எஸ். அதிகாரியை தொலைபேசியில் மிரட்டியதாக ஹஜ்ரத்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தன் மகனும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவிடம் ரூ.2.13 கோடி கடன் வாங்கி இருப்பதாகவும், தன்னுடைய ஆண்டு வருமானம் ரூ.32.02 லட்சம் என்றும், தன் மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.25.61 லட்சம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும், தன் மனைவிக்கு ஆடம்பர காரும், ரூ.5.06 கோடி சொத்து உள்ளதாகவும் வேட்புமனுவில் முலாயம் சிங் யாதவ் தெரிவித்து இருக்கிறார்.