மும்பையில் பரபரப்பு: ஓடும் ரெயில் முன் தலைவைத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

காலைப்பிடித்து இழுத்து மீட்ட பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு.
தற்கொலைக்கு முயன்ற இளைஞர்
Published on

மும்பை,

ஓடும் ரெயிலின் அடியில் சட்டென தனது தலையை வைத்து படுத்து தற்கொலைக்கு முயன்றார். இந்த நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

தற்கொலை முயற்சி

மும்பை தாதர் ரெயில் நிலையத்தில் இன்று மாரடைப்பை ஏற்படுத்தும் அளவிலான பயங்கர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள பிளாட்பாரத்தில் மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டு, மெல்ல வேகமெடுக்க தொடங்கியது. அப்போது, அங்கிருந்த 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தண்டவாளத்தை நோக்கி பாய்ந்தார். ஓடிக்கொண்டிருந்த அந்த ரெயிலின் அடியில் சட்டென தனது தலையை வைத்து படுத்து தற்கொலைக்கு முயன்றார்.

பெண் போலீஸ் அதிரடி

இதனை பார்த்து அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பெண் போலீஸ் ஒருவர், மின்னல் வேகத்தில் செயல்பட்டார். அவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பாய்ந்து சென்று, ரெயிலுக்குள் தலை வைத்திருந்த அந்த இளைஞரின் காலை இறுக பற்றினார். பின்னர், அவரை முழு பலம்கொண்டு பிளாட்பாரத்திற்கு வெளியே இழுத்து, இளைஞரின் உயிரை காப்பாற்றினார்.

வீடியோ வைரல்

இந்த நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. தற்கொலை செய்ய முயன்ற இளைஞரின் உயிரை சாதுரியமாக மீட்ட அந்த பெண் போலீசின் தைரியத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையே, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்த இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்து, அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

குடும்பத் தகராறு காரணம்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற அந்த இளைஞர் தீவிர மன உளைச்சலில் இருந்தது தெரியவந்தது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.

சமீபத்தில் மும்பை வந்தவர்

திருமணமான அந்த இளைஞர், சமீபத்தில்தான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடி மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார். இங்குள்ள தாதர் பகுதியில் வசிக்கும் தனது நெருங்கிய உறவினர்களின் வீட்டில் தங்கியிருந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com