

மும்பை,
மும்பையின் லோயர் பேரல் பகுதியில் பிரபல கமலா மில்ஸ் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பத்திரிகை மற்றும் ஊடக அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஏராளமான கடைகள் அமைந்துள்ளன.இந்த வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இங்குள்ள உணவு விடுதியில் ஏற்பட்ட தீ கட்டடத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. எனினும் தீ வேகமாக பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில், 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 11 பேர் பெண்கள், 3 பேர் ஆண்கள் ஆவர். காயமடைந்த பலர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீ விபத்து நடைபெற்ற கட்டிடத்தை மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மும்பை மாநகராட்சி இந்த தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 5 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கட்டிட உரிமையாளர்களும் இந்த விபத்துக்கு காரணமாக இருந்துள்ளனர், எனவே அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சி தரப்பில் தவறு இருந்தால், மாநகராட்சி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார். #KamalaMills #mumbaifire