

பலத்த மழைக்கு வாய்ப்பு
மும்பையில் கடந்த மாதம் 9-ந் தேதி மழைக்காலம் தொடங்கியது. பருவமழை தொடங்கிய சில நாட்களுக்கு நகரில் மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு நகரில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஒரு சிலநாட்கள் சாரல் மழை மட்டுமே பெய்தது. இதனால் நகரில் வெப்பநிலை அதிகரித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மும்பையில் ஓரளவு மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் மும்பை பெருநகரில் இன்று (ஞாயிறு) முதல் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதில் மும்பை நகர் பகுதியில் திங்கள் முதல் புதன் வரை பலத்த மழை பெய்யும் என கூறியுள்ளது.இதேபோல தானே, பால்கர் பகுதியில் இன்று முதல் புதன் வரை 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுநிலை
மத்திய மேற்கு பகுதி மற்றும் வங்காள விரிகுடாவையொட்டிய வடமேற்கில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதற்கிடையே நேற்று காலை நகரில் பரவலாக மழை பெய்தது. தானே, டோம்பிவிலி, கல்யாண் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.