மும்பை ரெயில் குண்டுவெடிப்பு: தண்டனைபெற்ற 12 பேரும் விடுதலை

ரெயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 189 பேர் உயிரிழந்தனர்.
மும்பை ரெயில் குண்டுவெடிப்பு: தண்டனைபெற்ற 12 பேரும் விடுதலை
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் ரெயில்களில் 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 189 பேர் உயிரிழந்தனர். மேலும், 820 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான லஷ்கர் இ குவாகர் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கமல் அன்சாரி, முகமது பைசல், குட்புதின் சித்திக், நவீத் ஹசன் கான், ஆசீப் கான், தன்வீர் அகமது, முகமது மஜித், ஷேக் முகமது அலி, முகமது சஜித், ரகுமான் ஷேக், ஷாகில் முகமது, சமீர் அகமது ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 12 பேரும் குற்றவாளிகள் என்று 2015ம் ஆண்டு மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகளில் 5 பேருக்கு தூக்கு தண்டனையும், எஞ்சிய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. குற்றவாளிகள் அனைவரும் மராட்டியத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி 12 பேரும் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில், குற்றவாளி கமல் அன்சாரி கடந்த 2021ம் தேதி கொரோனாவால் நாக்பூர் சிறையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், மும்பை ரெயில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மும்பை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தண்டனை பெற்ற 12 பேரையும் விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் எஞ்சிய 11 பேரும் விடுதலை செய்யப்பட உள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை என கூறிய ஐகோர்ட்டு கோர்ட்டு, வழக்கில் சிறப்பு கோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்தது. ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மராட்டிய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com