மும்பை: கனமழையால் ரெயில் சேவை கடுமையாக பாதிப்பு

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், தேவையின்றி வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என மும்பை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.
மும்பை: கனமழையால் ரெயில் சேவை கடுமையாக பாதிப்பு
Published on

மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு நகரங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று இரவும், இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. மத்திய மராட்டியத்தில் நிலவிய காற்றழுத்தம் கிழக்கு-வடகிழக்கு நோக்கி மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் கடந்து சென்றது. இதனால், அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கனமழையால் இன்று காலை குர்லா, சியான், தாதர் மற்றும் பரேல் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வாகன போக்குவரத்தும் முடங்கியுள்ளது. மும்பையின் நாரிமன் பாயிண்ட் பகுதியில் இன்று காலை 6 முதல் 7 மணி வரையில் 40 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.

நகரின் கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் லேசான மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், மும்பை, தானே மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு இன்று நாள் முழுவதும் மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், தேவையின்றி வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என மும்பை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.

இதில், மும்பை நகரில் கனமழையால் வெள்ளநீர் பல்வேறு பகுதிகளிலும் சூழ்ந்து காணப்படுகிறது. மழைநீரானது ரெயில் தண்டவாளங்களையும் சூழ்ந்துள்ளது. இதனால் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

ரெயில் போக்குவரத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை காலதாமதம் ஏற்பட்டது. மத்திய ரெயில்வேயின் முக்கிய வழிகள் வழியே கல்யாண் நகர் நோக்கி செல்லும் ரெயில்கள் 5 நிமிட தாமதத்துடனும், சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் செல்லும் விரைவு ரெயில்கள் 10 நிமிட தாமதத்துடனும் செல்கின்றன. துறைமுகம் மற்றும் மேற்கு லைன் வழியே செல்லும் ரெயில்களும் இதேபோன்று காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com