பெண் குழந்தைக்கு 'மகாலட்சுமி'என்று பெயர் சூட்டிய இஸ்லாமிய தம்பதி: மும்பை அருகே நெகிழ்ச்சி சம்பவம்

கழிவறை சென்றபோது பாத்திமா காதுனுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
பெண் குழந்தைக்கு 'மகாலட்சுமி'என்று பெயர் சூட்டிய இஸ்லாமிய தம்பதி: மும்பை அருகே நெகிழ்ச்சி சம்பவம்
Published on

மும்பை,

மும்பை அருகே மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிறந்த குழந்தைக்கு 'மகாலட்சுமி' என்ற பெயரை இஸ்லாமிய தம்பதியினர் சூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை அருகே உள்ள மிராரோடு பகுதியை சேர்ந்தவர் பாத்திமா காதுன (வயது31). நிறைமாத கர்ப்பிணியான இவர் கோலாப்பூருக்கு சென்று இருந்தார். பாத்திமா காதுனுக்கு ஜூன் 20-ந் தேதி குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தேதி கொடுத்து இருந்தனர். எனவே அவர் பிரசவத்துக்காக கடந்த 6-ந்தேதி கணவர் தய்யாப் உடன் கோலாப்பூரில் இருந்து மும்பைக்கு மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தார்.

ரெயில் லோனாவாலா வந்தபோது அதன் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரமாக ரெயில் அங்கு நிறுத்தப்பட்டது. ரெயில் இரவு 11 மணியளவில் லோனாவாலாவில் இருந்து புறப்பட்டது. இந்தநிலையில் கழிவறை சென்றபோது பாத்திமா காதுனுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. சக பெண் பயணிகள் பாத்திமா காதுனுக்கு உதவி செய்தனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில் கர்ஜத் வந்தவுடன் ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் தாய் மற்றும் சேயை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 3 நாட்களுக்கு பிறகு அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர்.

இந்தநிலையில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிறந்த குழந்தைக்கு 'மகாலட்சுமி' என்ற பெயரையே பெற்றோர் சூட்டினர். குழந்தைக்கு இந்து கடவுளின் பெயரை வைத்தது குறித்து தந்தை தய்யாப் கூறுகையில், "ரெயிலில் சிலர் திருப்பதியில் இருந்து மகாலட்சுமி கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் எனது குழந்தையை பார்த்து கோவிலுக்கு செல்லும் முன்பே ரெயிலிலேயே மகாலட்சுமியின் தரிசனம் தங்களுக்கு கிடைத்துவிட்டதாக கூறினர். எனவே தான் குழந்தைக்கு மகாலட்சுமி என பெயர் சூட்டினேன்" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இஸ்லாமிய தம்பதியினர் தங்களது குழந்தைக்கு இந்து கடவுளின் பெயரை சூட்டியது, மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com