

ஜுஜ்வா,
நாடு முழுவதும் உள்ள வீடில்லாத ஏழைகளுக்கு வீடு வழங்கும் வகையில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதத்துக்குள் 1 கோடி வீடுகளும், 2022-ம் ஆண்டுக்குள் 2.95 கோடி வீடுகளும் கிராமப்புறங்களில் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்ட பயனாளிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று குஜராத் மாநிலம் சென்றார். அங்குள்ள வல்சாத் நகர் அருகே உள்ள ஜுஜ்வா கிராமத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அவர் பயனாளிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
குஜராத் மாநிலம் எனக்கு கற்று தந்தது ஏராளம். இந்த பாடங்கள் மூலம், கனவுகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன். 2022-ம் ஆண்டில் நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, சொந்த வீடு இல்லாத குடும்பங்கள் இல்லாத நிலை இருக்க வேண்டும் என்பதே எனது கனவு. அதாவது 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு என்பதே எனது கனவு ஆகும்.
இந்த வீடுகளுக்காக அரசு பணம் கொடுக்கிறது. அதை பெற்றுக்கொண்டு அந்த குடும்பத்தினர் வியர்வை சிந்தி வீட்டை கட்டுகின்றனர். வீடு எப்படி இருக்க வேண்டும்? எப்படி கட்ட வேண்டும்? என்பதை அவர்களே முடிவு செய்கின்றனர். நாங்கள் கட்டிட ஒப்பந்ததாரர்களை நம்பவில்லை, மாறாக அந்த குடும்பத்தை நம்புகிறோம். தங்கள் வீட்டை அவர்களே கட்டும்போது, சிறப்பாகவே கட்டுவார்கள்.
மிகச்சிறந்த இந்த திட்டத்தின் கீழ் குஜராத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்ட பயனாளிகளிடம் காணொலி காட்சி மூலம் ஏற்கனவே கலந்துரையாடிய போது, விதிமுறைகளின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இந்த திட்டத்தில் வீடு பெறுவதற்கு ஒரு ரூபாய் கூட லஞ்சமாக கொடுக்கவில்லை என்றும் தாய்மார்களும், சகோதரிகளும் திருப்தி தெரிவித்தனர்.
இது உண்மையிலேயே சாத்தியமாகி இருக்கிறது. ஏனென்றால் எனது அரசில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை. ஏழைகளுக்காக டெல்லியில் இருந்து 1 ரூபாய் வழங்கினால், மொத்தமுள்ள 100 பைசாவும் அதாவது ஒவ்வொரு பைசாவும் ஏழைகளை சென்றடைகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
ஏழைகள் நலனுக்காக மத்திய அரசு 1 ரூபாய் வழங்கினால், வெறும் 15 பைசா மட்டுமே அவர்களை சென்றடைகிறது என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறுவது உண்டு. அதை மறைமுகமாக தாக்கும் வகையில் பிரதமர் மோடி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.