

நாக்பூர்,
இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 3-ஆம் தேதி நீட் தேர்வு நடந்தது. ஆனால் முன்கூட்டியே கசிந்த வினாத்தாள் விவகாரம் பின்னர் தெரியவந்தது. இதையடுத்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி மறு தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த முறை தவறு நேர்ந்து விடக்கூடாது என்பதில் மத்திய அரசு உள்ளது. ஆகவே வினாத்தாள்கள் உறுதியாக அனைத்தும் விமானப்படை விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டன. அவற்றுக்கு துணைராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.
இந்த நீட் மறுதேர்வை 22.70 லட்சம் மாணவ - மாணவிகள் எழுதுகின்றார்கள். இதில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 3.56 லட்சம் பேர் எழுத உள்ளார்கள். மராட்டியம் 2.23 லட்சம், ராஜஸ்தான் 2.03 லட்சம்பேர் எழுதுகின்றனர். இந்த 3 மாநிலங்களும் சேர்த்து 34 சதவீத பங்கை வகிக்கின்றன. பீகார் 1.56 லட்சம், கர்நாடகம் 1.45 லட்சம், தமிழ்நாடு 1.42 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளார்கள்.
நீட் தேர்வுக் கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பிக் கொடுத்ததுடன் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரம் கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை நீட் தேர்வு நடைபெறும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாலை 6.20 மணி வரை தேர்வு நடைபெறும். பகல் 1.30 மணிக்கு தேர்வு மையங்களின் நுழைவுவாயில் பூட்டப்படும். காலை 11 மணி முதல் 1.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்தியாவிற்குள் 551 நகரங்கள், வெளிநாடுகளில் 14 நகரங்களில் நாளை நீட் மறு தேர்வு நேரத்தை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் நாக்பூரைச் சேர்ந்த நீட்-யுஜி (NEET-UG) தேர்வுக்குத் தயாராகும் மாணவர் ஒருவருக்கு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த மறுதேர்விற்கு அபுதாபியில் உள்ள ஒரு பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டதாக தெரியவந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் தேசிய தேர்வு முகமையிடம் (NTA) முறையீடு செய்துள்ளனர்.
அப்துல்லா முகமது தலிப் என்பவரின் குடும்பத்தினர், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை அவரது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தபோது, விண்ணப்பத்தின்போது எந்த விருப்பமும் குறிப்பிடப்படாதபோதிலும், அபுதாபியில் உள்ள ஒரு பள்ளி தேர்வு மையமாக அதில் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அவரது தந்தை முகமது தலிப், தங்கள் குடும்பம் உடனடியாக தேசிய தேர்வு முகமை (NTA) உதவி எண்ணைத் தொடர்பு கொண்டதாகவும், இந்தப் பிரச்சினை குறித்து மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் ஒரு புதிய ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மற்றொரு மாவட்டத்திற்கு பயணம் செய்ய குறைந்த நேரமே உள்ளதாலும், இந்த எதிர்பாராத ஒதுக்கீடு மாணவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாலும், நாக்பூரையே தேர்வு மையமாக ஒதுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.