ஆந்திர முதல்-மந்திரியாக 12-ந்தேதி பதவி ஏற்கிறார் சந்திரபாபு நாயுடு - பிரதமர் மோடிக்கு அழைப்பு

தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில முதல்-மந்திரியாக வருகிற 12-ந்தேதி பதவி ஏற்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

விஜயவாடா,

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் களத்தில் இருந்தது.

மொத்தமுள்ள 175 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஜனசேனா 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 11 இடங்களை மட்டும் பெற்று படுதோல்வியை சந்தித்தது. மற்றவர்கள் 8 இடங்களை பெற்றனர்.

தேர்தலில் வெற்றி பெற்றதும் சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி புறப்பட்டு சென்றார். இதனிடையே ஆந்திர மாநில புதிய அரசு பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலத்தில் புதிய முதல்-மந்திரியாக வருகிற 12-ந்தேதியன்று பதவி ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான கோரண்ட்லா புச்சையா சவுத்ரி கூறுகையில், "டெல்லியில் நடைபெறும் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்கிறார். அதன்பிறகு வருகிற 11-ந்தேதி தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக முறைப்படி தேர்ந்து எடுக்கப்படுவார். 12-ந்தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும்.

விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும். பதவியேற்பு நிகழ்ச்சி தலைநகர் அமராவதியில் நடைபெறும், ஆனால் இடம் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.

இதற்கிடையே குண்டூர் உண்டவல்லியில் தெலுங்குதேசம் கட்சியின் புதிய எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு முக்கிய ஆலோசனை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com