டெல்லியில் ஜே.பி.நட்டாவை சந்தித்த நயினார் நாகேந்திரன்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
டெல்லியில் ஜே.பி.நட்டாவை சந்தித்த நயினார் நாகேந்திரன்
Published on

டெல்லி,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ளது.

இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், சட்டசபை தேர்தல் வியூகம், கூட்டணியில் யார் யாரை சேர்ப்பது? உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் மட்டும் சுமார் அரை மணி நேரம் தனியாக பேசினர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரையும் கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.

அதேவேளை, சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேற்று இரவு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்தார். டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது பாஜக கூட்டணியில் மீண்டும் இணையுமாறு டிடிவி தினகரனை அண்ணாமலை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் சூழ்நிலை, கூட்டணி உள்பட பல்வேறு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், அக்டோபர் மாதம் தொடங்க உள்ள தனது தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாகவும் ஜே.பி.நட்டாவிடம் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஜே.பி.நட்டாவுடனான சந்திப்பிற்குப்பின் உள்துறை மந்திரி அமித்ஷாவையும் நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com