தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுமை மற்றும் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் நமது விஞ்ஞானிகளின் திறமையைப் பிரதிபலிக்கிறது என தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 இல் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதன் மூலம் ஒரு வரலாற்று சாதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் படைத்தது. பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கிய அந்த இடத்திற்கு 'சிவசக்தி' என்று பெயரிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்தியா, நிலவில் தரையிறக்கும் நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது. மேலும், இந்தத் தேதி அதிகாரபூர்வமாக 'தேசிய விண்வெளி தினமாக' அறிவிக்கப்பட்டது. அதேபோல ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இதன்படி, சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இந்தியாவின் தேசிய விண்வெளி தினத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தேசிய விண்வெளி தின வாழ்த்துக்கள்! இந்தியாவின் விண்வெளிப் பயணம் நமது உறுதிப்பாடு, புதுமை மற்றும் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் நமது விஞ்ஞானிகளின் திறமையைப் பிரதிபலிக்கிறது என தெரிவித்துள்ளார்.






