"தேசிய இளையோர் திருவிழா": டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடினார் எல். முருகன்

இளைஞர்களுடன் இணைந்து இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக எல்.முருகன் கூறினார்.
புதுடெல்லி,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்கும் நோக்கிலான சீரிய பணிகளோடு நமது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அவ்விதம், உலகிலேயே மிகப்பெரும் இளைஞர் சக்தி கொண்ட நமது தேசத்தை, வளர்ச்சி மிக்கதாய் கட்டமைக்கும் வல்லமை இளைய சமுதாயத்தினரிடமே உள்ளது என்பதால், அவர்களுக்கான "தேசிய இளையோர் திருவிழா" டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள 'வளர்ச்சியடைந்த பாரதத்தில் இளைய தலைவர்கள்' என்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் இருந்து டெல்லி வந்துள்ள இளைஞர்களை, எனது இல்லத்தில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினேன். மேலும், தமிழ் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகளுடன், அவர்களோடு இணைந்து இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






