

புதுடெல்லி,
தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் கடந்த 20-ந் தேதி தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் தனி நபர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது. இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் என்று தலித் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஏப்ரல் 2-ந் தேதி (அதாவது நேற்று) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு தலித் அமைப்புகள் அழைப்பும் விடுத்து இருந்தன. இதனால் தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்புகள் நேற்று நாடு முழுவதும் தீவிர போராட்டத்தில் குதித்தன. அப்போது வட மாநிலங்களில் பயங்கர வன்முறையும் வெடித்தது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர், பிந்த், மொரேனா ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு, வன்முறை, சூறையாடல் சம்பவங்களில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்தனர்.
குவாலியர் மாவட்டத்தில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பிந்த், மொரேனா மாவட்டங்களில் வன்முறைக்கு மூவர் பலியாயினர். மேலும் வன்முறையாளர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். மொரேனா நகரில் மாணவர் அமைப்பின் தலைவர் ராகுல் பதக் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது.
இதனால் அங்கும் குவாலியர், பிந்த் மாவட்டங்களிலும் வன்முறை மேலும் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ராணுவமும் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்படும் என்றும், மாநில மக்கள் அமைதி காக்கவேண்டும் எனவும் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் வேண்டுகோள் விடுத்தார். ராஜஸ்தானிலும் நேற்று வன்முறை தலைதூக்கியது. மாநிலத்தின் பல இடங்களில் பொதுச்சொத்துகள் அடித்து நொறுக்கப்பட்டன.
ஜோத்பூர் நகரில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கினர். அவர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கயிர்தால் நகரில் போலீஸ் நிலையத்தை தீ வைத்து கொளுத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் 9 போலீசாரும், 19 போராட்டக்காரர்களும் காயம் அடைந்தனர்.
உத்தரபிரதேசத்தில் ஆக்ரா, மீரட், அசம்கார் ஆகிய மாவட்டங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. முழு அடைப்பையும் மீறி பஸ்கள் ஓடியதால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அசம்கார் நகரில் 2 பஸ்களை தீ வைத்து கொளுத்தினர். மீரட்டில் பல கார்களை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர்.
இதேபோல் ஏராளமான பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. வன்முறைக்கு 2 பேர் பலியானார்கள். 40 போலீசாரும், 35 ஆர்ப்பாட்டக்காரர்களும் காயம் அடைந்தனர்.இதையடுத்து போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடவேண்டாம் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்.
ராஜஸ்தான், ஒடிசா, பீகார், பஞ்சாப், அரியானா, டெல்லி, இமாசல பிரதேசம், மராட்டியம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை போட்டும், தண்டவாளங்களில் அமர்ந்தும் ரெயில்களை மறித்தனர். இதனால் நூற்றுக்கணக்கான ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. மராட்டிய மாநிலத்தில் பல இடங்களில் பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன.
தலைநகர் டெல்லியில் நூற்றுக்கணக்கானவர்கள் மண்டி மெட்ரோ அவுஸ் நிலையத்தின் வெளியே கூடி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஞ்சாபில், டெல்லி மற்றும் லாகூர் நோக்கி சென்ற இந்திய-பாகிஸ்தான் பஸ்கள் அமிர்தசரஸ், சிர்ஹிந்த் நகரங்களில் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இமாசலபிரதேச தலைநகர் சிம்லாவில் பெரும்பாலான கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன.
வடமாநிலங்கள் பெரும்பாலானவற்றில் முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் சாலை மறியலும் ஈடுபட்டதால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. போராட்டம் காரணமாக பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறையும் விடப்பட்டது. சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டன.