கடற்படை ஆதரவு கப்பல் கட்டுமானம்: விசாகப்பட்டினத்தில் ராஜ்நாத் சிங் நாளை தொடங்கி வைக்கிறார்

இந்திய கடற்படைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படும் இந்த 5 கடற்படை ஆதரவுக் கப்பல்களும் தலா 43,500 டன் எடை கொண்டவை ஆகும்.
கடற்படை ஆதரவு கப்பல் கட்டுமானம்: விசாகப்பட்டினத்தில் ராஜ்நாத் சிங் நாளை தொடங்கி வைக்கிறார்
ராஜ்நாத் சிங்
Published on: 

விசாகப்பட்டினம்,

நாட்டின் உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் நாளை நடைபெறும் விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

5-வது கப்பலுக்கு அடித்தளம்

இந்திய கடற்படையின் பலத்தை பெருக்கும் நோக்கில், உள்நாட்டிலேயே கட்டப்பட உள்ள முதலாவது கடற்படை ஆதரவுக் கப்பல்–1-ன் (Naval Support Ship-1) கட்டுமானப் பணியை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார். அத்துடன், இந்தத் தொடரின் 5-வது கப்பலான கடற்படை ஆதரவுக் கப்பல்–5-க்கான அடித்தளக் கட்டமைப்பு (Keel Laying) அமைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

அதிநவீன தொழில்நுட்பம்

இவற்றுடன், கப்பல் கட்டும் தளத்தில் மேம்படுத்தப்பட்ட ‘ஸ்லிப்வே–4’ (Slipway-4) மற்றும் 300 டன் எடையைக் கையாளும் திறன் கொண்ட பிரம்மாண்ட ‘கோலியத் க்ரேன்’ (Goliath Crane) ஆகியவற்றையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நீட்டிக்கப்பட்ட நீளத்துடனும், கூடுதல் எடை தாங்கும் திறனுடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்லிப்வே மற்றும் க்ரேன் வசதி மூலம், 45 ஆயிரம் டன் வரையிலான பெரிய மற்றும் சிக்கலான போர் மற்றும் ஆதரவுக் கப்பல்களை ஹிந்துஸ்தான் கப்பல் தளத்தில் இனி எளிதாகக் கட்ட முடியும்.

இந்திய பெருங்கடலில் அதிகரிக்கும் பலம்

இந்திய கடற்படைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படும் இந்த 5 கடற்படை ஆதரவுக் கப்பல்களும் தலா 43,500 டன் எடை கொண்டவை ஆகும். நடுக்கடலில் போரிடும் போர்க்கப்பல்களுக்கு தேவையான எரிபொருள், உணவு மற்றும் ஆயுதங்களை உடனுக்குடன் வழங்கும் திறன்படைத்த இக்கப்பல்களால், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நமது கடற்படையின் நீண்டதூரம் பயணிக்கும் செயல்பாட்டுத் திறன் பலமடங்கு அதிகரிக்கும்.

முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

நாளை நடைபெறும் இந்த விழாவில், ஆந்திரப்பிரதேச முதல்-மந்திரி என். சந்திரபாபு நாயுடு, இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, பாதுகாப்புத் தளவாட உற்பத்தித்துறை செயலாளர் சஞ்சீவ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com