

ஜக்தல்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் உள்துறை மந்திரி அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நக்சல் ஒழிப்பு குறித்து அவர் பேசியதாவது;
நக்சல் இல்லாத இந்தியா இயக்கத்தில் சில தேதிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. சத்தீஸ்கரில் பாஜக அரசு பொறுப்பேற்ற டிசம்பர் 13, 2023 அன்று, நக்சலிசத்தை முழுமையாக ஒழிப்பதற்கான உறுதியான இயக்கம் தொடங்கியது. மார்ச் 31, 2026-க்குள் நாட்டில் நக்சலிசத்தை முழுமையாக ஒழிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றுவதற்காக, ஆகஸ்ட் 24, 2024 அன்று அனைத்து மாநிலங்களின் காவல்துறை தலைமை இயக்குநர்களின் கூட்டம் கூட்டப்பட்டது.
பாதுகாப்புப் படையினரின் வீரம், தைரியம் மற்றும் உன்னத தியாகத்தின் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பே நாட்டில் இருந்து நக்சலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. நக்சலிசத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசுக்கு பல மாநிலங்கள் (பாஜக அரசு இல்லாத மாநிலங்கள்) உதவியுள்ளன. ஆனால் சத்தீஸ்கரில் ஆட்சியில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசு எந்த உதவியும் செய்யவில்லை.
"சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பஸ்தரில் எங்களால் நக்சலிசத்தை ஒழிக்க முடிந்தது. வளர்ச்சி சென்றடையாததால்தான் நக்சலிசம் செழித்தது என்று சில அறிவுஜீவிகள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றன. ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானது. நக்சலிசம் இருந்ததால்தான் இந்தப் பகுதிகளுக்கு வளர்ச்சி சென்றடையவில்லை. நக்சல் பாதிப்புள்ள பகுதிகளை விடவும் நாட்டில் மிகவும் பின்தங்கிய பல பகுதிகள் இருந்தன. அங்கு நக்சலிசம் இல்லை. அந்தப் பகுதிகள் படிப்படியாக வளர்ச்சிப் பாதையில் முன்னேறின.
மறுபுறம், பஸ்தர் மற்றும் பிற நக்சல் பாதிப்புள்ள பகுதிகள் வன்முறை மற்றும் அச்சத்தின் காரணமாக வளர்ச்சியடையாமல் இருந்தன. ஒரு காலத்தில் நக்சலிசத்தின் பிடியில் இருந்த பகுதிகளில் இனி புதிய தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ஒரு விரிவான வளர்ச்சி ஏற்படும்.”
இவ்வாறு அவர் கூறினார்.