நீட் தேர்வு ரத்தானதால் விரக்தி: மாணவி தூக்கிட்டு தற்கொலை

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு ரத்தானதால் விரக்தி: மாணவி தூக்கிட்டு தற்கொலை
Published on

பெங்களூரு,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஆனால், நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. தேர்வு நடைபெறுவதற்கு சில நாட்களுக்குமுன்பே ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது. இதையடுத்து 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. மேலும், நீட் மறுதேர்வு அடுத்த மாதம் 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கர்நாடக மாநிலம் கலபுராகி பகுதியை சேர்ந்த மாணவி பாக்யஸ்ரீ (வயது 18). இவர் கடந்த 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார். அவர் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று பெற்றோரிடம் கூறி வந்தார். ஆனால், வினாத்தாள் கசிவால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் பாக்யஸ்ரீ மிகுந்த மன உளைச்சல், விரக்தியில் இருந்தார்.

இந்நிலையில், நீட் தேர்வு ரத்தால் மிகுந்த விரக்தி, மன உளைச்சலில் இருந்த மாணவி பாக்யஸ்ரீ இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை வீட்டின் அறையில் உள்ள பேனில் (மின்விசிறி) மாணவி பாக்யஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com