நீட் முதுநிலை தேர்வு கட் ஆப் மதிப்பெண் குறைப்பு

2 சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த பிறகும், இன்னும் 18 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.
புதுடெல்லி,
எம்.டி., எம்.எஸ். மற்றும் முதுகலை டிப்ளமோ போன்ற மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான நீட் முதுகலை தேர்வு(NEET-PG) முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ந்தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 19-ந்தேதி வெளியிடப்பட்டன.
இதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கப்பட்டு, இதுவரை 2 சுற்று கலந்தாய்வுகள் நடந்து முடிந்துள்ளன. அதில், மொத்த மதிப்பெண்களான 800-ல் பொதுப்பிரிவினருக்கு 276 மதிப்பெண்களும், ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 235 மதிப்பெண்களும் கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தன.
ஆனால் 2 சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த பிறகும், நாடு முழுவதும் இன்னும் 18 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இதனால், மத்திய அரசின் ஒப்புதலுடன் அடுத்த சுற்று கலந்தாய்வுக்கான கட் ஆப் மதிப்பெண்களை குறைத்து தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி பொதுப் பிரிவிற்கான நீட் முதுநிலை கட்ஆப் பர்சண்டைல் 50-ல் இருந்து 7 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான கட்ஆப் பர்சண்டைல் 40-ல் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






