நீட் வினாத்தாள் கசிவு; 5 பேரை கைது செய்து பெயர் விவரங்களை வெளியிட்ட சி.பி.ஐ.

அவர்களில் 3 பேர் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்தவர்கள். ஒருவர் குருகிராம் மற்றும் மற்றொருவர் நாசிக் ஆகிய நகரங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

நீட் வினாத்தாள் கசிவு; 5 பேரை கைது செய்து பெயர் விவரங்களை வெளியிட்ட சி.பி.ஐ.
Published on

புதுடெல்லி

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இதற்கான மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், கூடுதல் கட்டணம் எதுவும் கட்ட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்காக மாணவர்கள் ஏற்கெனவே கட்டிய தேர்வு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், மத்திய அரசின், கல்வி அமைச்சகத்திற்கு உட்பட்ட உயர்கல்வி துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சி.பி.ஐ. நேற்று வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை சி.பி.ஐ. அமைப்பு கைது செய்துள்ளது.

அவர்களில் 3 பேர் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்தவர்கள். ஒருவர் குருகிராம் மற்றும் மற்றொருவர் நாசிக் ஆகிய நகரங்களை சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேகத்திற்குரிய பலரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் 5 பேரும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதில், சுபம் கைர்னார் (நாசிக்), யஷ் யாதவ் (குருகிராம்) மற்றும் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த மங்கிலால் பிவால், விகாஸ் பிவால், தினேஷ் பிவால் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் மற்றும் மாநிலங்களவை எம்.பி.யான கபில்சிபல் நேற்று பேசும்போது, தேர்வுகள் நடப்பதும், வினாத்தாள் கசிவதும் வழக்கம்போல் நடைபெற கூடிய ஒன்றாகி விட்டது. எந்த பகுதிகளில் இந்த வினாத்தாள் கசிவுகள் நடக்கின்றன என்று பார்த்தால், அது ஆச்சரியம் அளிக்கிறது. பீகார், மராட்டியம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் உத்தராகண்டில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் தொடர்கின்றன.

இவை அனைத்தும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள். பா.ஜ.க. அரசுகளில் மட்டும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் ஏன் தொடர்கின்றன? என கேள்வி எழுப்பினார். 2016, 2019, 2021, 2024 மற்றும் 2026 ஆண்டுகளில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்தன. அப்போது நடந்த விசாரணைகளில் ஏதேனும் முடிவுகள் வந்தனவா? ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் ஒப்புதலின்றி அது நடக்காது என்றார்.

இதில் மாணவர்களை பற்றி நினைத்து பார்க்கிறார்களா? இதனால், ஏழை மாணவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீண்டும் கடின உழைப்பை கொடுக்க வேண்டும். கல்வி நடைமுறையில் உள்ளவர்கள் இதற்கு பொறுப்பேற்று அனைத்து மந்திரிகள் மற்றும் கல்வி மந்திரிகளும் பதவி விலக வேண்டும். கல்வியறிவு இல்லாதவர்கள் முதல்-மந்திரியாகும்போது, இந்த வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடக்கின்றன என்றார். இதற்கு தண்டனையாக பா.ஜ.க. தலைமையிலான ஒவ்வோர் அரசின் கல்வி மந்திரிகளும் பதவி விலக வேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com